செய்தியாளர்: மனு
மலையாள நடிகரான விநாயகன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு கல்பாத்தி கோயிலுக்குச் செல்ல நடிகர் விநாயகன் வந்தார். அப்போது கோயில் நடை சாத்திய நிலையில், விநாயகன் கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார், விநாயகனை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து சாதி பாகுபாடு காரணமாக விநாயகனை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர். ஆனால், அத்தகைய செய்தி போலியானது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என கூறியதாகவும், இது கோயில் நடைமுறை, வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அய்யங்காளியையும், ஐயங்காரையும் பிரித்து மோத வைத்து இனிமேல் குடும்பம் நடத்த முயற்சிக்க முடியாது என இந்த கோயில் விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளுக்கு முகநூலில் ஒரு பதிவு மூலம் விநாயகன் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.