தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.
மாநாடு திடலுக்கு உள்ளே கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. உள்ளே இடம் இல்லாவிட்டால் பொதுமக்கள் மாநாடு திடலுக்கு வெளியே நின்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாநாடு திடலுக்கு உள்ளே தேவையான குடிநீர் வழங்க ஒவ்வொரு அரங்கிலும் 2 தண்ணீர் டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன, இது மட்டும் இல்லாமல் மாநாட்டு திடலை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆங்கங்கே குடிநீர் டேங்க்குகள்வைக்கப்பட்டுள்ளன.
திடலை சுற்றி 600 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே சிகிச்சையளிக்க அடிப்படைவசதிகளுடன் 18 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 150 மருத்துவர்கள், 150 மருத்துவ பணியாளர்கள் என 300 பேர்பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேல் சிகிச்சை தேவைப்பட்டால்மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்ல 20 ஆம்புலன்ஸ்களும்தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைந்தால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக உள்ளதால் மக்கள் தொப்பி அல்லது குடை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலை ஒட்டியுள்ள சாலைகளில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த 200 ஏக்கர் பரப்பில் 4 பார்க்கிங் மைதானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு திடல் பகுதியில் 500க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை கண்காணித்து ஒழுங்குபடுத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு எளிதாக இருக்க பிரத்யேகமாக ஒரு மொபைல் டவர் நிறுவப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிகளை எளிதாக கண்டுகளிக்க 72 எல்இடி திரைகள் திடலை சுற்றி வைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரின் வழக்கமான பாதுகாப்போடு தனியார் தன்னார்வலர்கள்15 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காவல் துறை கட்டுப்பாடு காரணமாக மாநாட்டு திடலுக்குள் உணவு அளிக்க தடை உள்ளது. எனவே வருபவர்கள் வெளியே உணவருந்தி விட்டோ அல்லது உணவு பார்சலையோ எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.