திரையில் இருந்து அரசியலுக்கு வருவது பலருக்கும் சுலபமாகி விட்டது. அந்தப் பாதையில் பயணிக்க நினைக்கும் சிலர்கூட, சொந்தமாக கட்சி ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். அதற்கு தமிழ்நாடு மட்டுமல்ல... இந்தியாவிலேயே எத்தனையோ பேரை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், தற்போதுகூட, தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியைத் தொடங்கினார். எனினும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறார். இதற்காக, கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் முன்னோட்டமாக உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், அவருடைய கட்சி உறுதிமொழியும் அனைவரையும் கவர்ந்திழுக்கச் செய்தது. ’நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்’ என தமிழ் மண்ணையும், தமிழ் மொழியையும் விட்டுக் கொடுக்காமல் அவர் வைத்த உறுதிமொழி, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, பிற கட்சியினரையும் கவரவைத்தது.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராகச் சேர அழைப்பு விடுத்து அவர் பேசிய வீடியோவும் மக்களிடம் வைரலானது.
அவர் பேசியிருந்த வீடியோவில், "இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியைப் படியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராகச் சேருங்கள்" எனப் பேசி, தமிழக வெற்றிக் கழகத்தை இணையத்தில் வைரலாக்கி இருந்தார். இதனால் அவரது கட்சியில் திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி, பிற கட்சியைச் சார்ந்தவர்களும், அவரது ரசிகர்களும், இளைய தலைமுறையினரும் நாள்தோறும் இணைந்து வருகிறார். அந்த வகையில் இதுவரை 30 லட்சம் பேர் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அவர் கட்சியில் இருந்து வெளியான முதல் அரசியல் அறிக்கையும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. எல்லாக் கட்சிகளும் பொதுவான சட்டங்கள், திட்டங்கள் ஆகியவற்றுக்கு கருத்து தெரிவிப்பது வழக்கம்தான் என்றாலும், கட்சி ஆரம்பித்தவுடனேயே, அதுவும் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அவர் கட்சி வெளியிட்ட அறிக்கைதான் பேசுபொருளானது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில், ’சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் கட்சியின் இந்த அறிக்கைதான் தற்போது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல கட்சிகள் கொடிப்பிடித்து நிற்கின்றன. சில மாநில முதல்வர்கள் அதை தங்கள் மண்ணில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர்.
குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ’ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது’ என சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே அறிக்கை வெளியிட்டதுடன், அது சம்பந்தமாக தமிழக அரசு செய்த செயல்களையும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விஜய் கட்சி வெளியிட்ட கட்சி அறிக்கையில், குடியரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசு பற்றி எந்த கருத்தும் முன்வைக்கப்படவில்லை. ஆனால், ’தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்’ என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இதுதான் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. அதாவது, சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசைக் கேள்வி கேட்காமல், மாநில ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கட்சி அறிக்கை கூறியிருப்பது, நடிகர் விஜய் மத்திய அரசிடம் பயந்துபோவதையும் பணிந்துபோவதையும் காட்டியிருப்பதாக அரசியலாளர்கள் விமர்சிக்கின்றனர்.
அதேநேரத்தில், தமிழகத்தில் தம் பெயரை நிலைநிறுத்துவதற்காக, இப்படியொரு கருத்தைப் பதிவிட்டு, திமுக தலைமையிலான மு.க.ஸ்டாலின் ஆட்சியைச் சீண்டியிருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், ’தமிழ்நாட்டில் ஏற்கெனவே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபின்னர், வேறு யார் உறுதியளிக்க வேண்டும்? தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உங்களுக்குச் சம்மதமா’ என அவர்கள் மேலும் விமர்சித்துள்ளனர்.