பாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்டது.
தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே எஸ்பிபி உடலுக்கான இறுதிச்சடங்குகள் தொடங்கி நடைபெற்றது. புரோகிதர்கள் மந்திரங்களை ஓத அவரது மகன் எஸ்.பி.சரண் இறுதிச்சடங்குகளை செய்தார்.
இறுதிச் சடங்கின் போது திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் விஜய் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் எஸ்பிபியின் மகன் சரணுக்கு ஆறுதல் கூறினார்.