சொகுசு கார் வழக்கு: தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

சொகுசு கார் வழக்கு: தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
சொகுசு கார் வழக்கு: தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
Published on

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி வரி 1,88,11,045 ரூபாயை செலுத்தி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு சென்றபோது, நுழைவு வரியை தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்க உத்தரவிடப்பட்டது. கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டுள்ளதால், அதை செலுத்த விஜய் மறுத்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் வரியை செலுத்த வேண்டுமென வணிகவரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து விஜய் 2012ல் தொடர்ந்த வழக்கில், 20 சதவீத செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2012 ஜூலை 23ல் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு, வாகனத்தை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த உத்தரவிட்டதுடன், வழக்கு தொடர்ந்ததற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவில், சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது, நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும், வரி என்பது நன்கொடையல்ல, அது கட்டாயப் பங்களிப்பு போன்ற கருத்துக்களை கூறி நடிகர் விஜயை கடுமையாகச் சாடியிருந்தார். நீதிபதியின் கருத்து மற்றும் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு குறித்தும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com