10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதி மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வு இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அவர், “முடிந்தவரை படியுங்கள்; எல்லாத் தலைவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; மற்ற விஷயங்களை விட்டு விடுங்கள். இதுதான் இன்றைக்கு உங்களுக்கான மெசேஜ்.
‘உன் நண்பரைப் பற்றிச் சொல்லு; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ - இதை, நிறையப் பேர் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனக்குத் தெரிந்து இன்று இதெல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். ‘நீ எந்த சமூகவலைத்தளப் பக்கத்தை ஃபாலோ செய்கிறாய் என்று சொல்லு; நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பதுதான் இன்றைய பழமொழியாக இருக்கிறது. உங்களை Discourage செய்ய ஒரு கூட்டம் கண்டிப்பாக இருக்கும்.
’உன்னால் அது முடியாது, இது சரியில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அது எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். உனக்குள்ள ஒருத்தன் இருப்பான்; உனக்குள்ள ஒருத்தி இருப்பாள். அவன் என்ன சொல்கிறான்; அவள் என்ன சொல்கிறாள் என்பதை மட்டுமே கேளுங்கள்” எனக்கூறி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அசத்தினார்.
நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் பார்க்கலாம்.