ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் நேற்று நடிகர் வடிவேலு தரிசனம் செய்தார். வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தாயாரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டுமென வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றினார்.
தரிசனம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “எல்லாமே எனக்கு தாய் தான். தாயார் தான் எனது குடும்பத்திற்கு எல்லாமே. அவர் இறந்த தூக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. எனது சகோதரர் இறந்து ஆறு மாதம் தான் ஆகிறது. என் தாயாரும் இறந்து விட்டதால் இந்த சோகத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை” என்றார்.
மேலும் செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து கருத்து கேட்ட பொழுது செய்தியாளர்களைப் பார்த்து கலகப்பாக உரையாடினார். “நீங்களும் வீடியோ எடுத்துக்கொண்டே இருக்காமல் நீங்களும் கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இப்படியே கேமராவை பிடிச்சிக்கிட்டு வேல பாக்கப்போறீங்களா. டக்குன்னு நீங்களும் உள்ள வந்து நீங்களும் புது கட்சி ஆரம்பிங்க. எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிச்சிட்டு போக வேண்டியது தானே?
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.
டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார். ஆகவே, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது அல்லவா?” என்றார். பின்னர், ஆறு மாதம் கழித்து தனது சகோதரனுக்கு மோட்ச தீபம் ஏற்ற ராமேஸ்வரம் வஃதுள்ளதாக கூறிச் சென்றார்.