நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். சாமானியர்கள் தொடங்கி முதல்வர் வரை பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலகமே திரண்டு தீவுத்திடலுக்கு நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தியது.
அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பலரும் அடுத்தடுத்த நாட்களில் அவரது நினைவிடத்தில் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
நேற்று விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமாருடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்தும் போது சூர்யா தேம்பித் தேம்பி அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.
இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு போனபோது, ஒவ்வொரு நாளும் அவர் செய்த விஷயங்களையும், அவரது துணிச்சலையும் பார்த்து அசந்துதான் போயிருக்கிறேன். அவரை சந்தித்து நேரில் உட்காந்து பேசமுடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. அவரை மாதிரி இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவரது முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு பெரிய இழப்புதான். பெரியவர்களை இழப்பது துயரமான விஷயம். அண்ணனின் இழப்பு கஷ்டமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது; மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது; பெரியண்ணா படத்தின் மூலம் அவருடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்து, அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எனக்கு ஊட்டி விட்டார்; அண்ணனை போல இன்னொருத்தர் கிடையாது; இறுதி அஞ்சலியில் அவருடைய முகத்தை பார்க்க முடியாமல் போனது ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்றார்.