இயக்குநர் சிவா இயக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, நட்டி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக, ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர்தப்பியதாகவும், இந்த விபத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து, உடனடியாக சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது. சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ’நலமுடன் இருக்கிறேன்’ என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போதுகூட, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவிகளைச் செய்துவருகின்றன. அதுபோல் சின்னத்திரை நடிகர்களும் பெரிய நடிகர்களின் ரசிகர்களும் ஆங்காங்கே உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பிலும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் இடுப்பளவு இருக்கும் நீரில் சென்று உதவி செய்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள், கழிவுநீருடன் கலந்த வெள்ள நீரில் நிற்பதால் அவர்களின் காலில் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால், அவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்த ஆடியோவில், “பசங்க நிறைய பேர் தண்ணீரில் நிற்கிறார்கள். பணிகளுக்குப் பிறகு காலில் மஞ்சள்பொடி, தேங்காய் எண்ணெய்ப் பூசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.