செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் 'தி.மு.க பவளவிழா முப்பெரும் விழா' முகப்பேர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியபோது...
தமிழகத்தில் 2 விதமான நாத்திகர்கள் உள்ளனர். ஒருவர் கடவுள் இல்லையென்று கடவுள் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள். மற்றொரு கூட்டம் எங்களை போன்ற பெரியார்வாதிகள். இதில், பெரியார்வாதிகளிலும் இரண்டு பிரிவு உள்ளனர். ஒருவர் எங்களைப் போன்ற கடவுளை வணங்காத வகையினர், மற்றொருவர் அமைச்சர் சேகர்பாபுவை போன்று கடவுளை வணங்கும் கூட்டம்.
கடவுளை வெறுத்த நாத்திகவாதிகளிடம் சென்று என்னை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஒரு தாழ்த்தப்பட்டவர் சொன்னால், அதற்குள் கடவுள் இல்லையப்பா, அங்கு சென்று என்ன செய்யப்போகிறாய் என்று கூறுவார்.
அதுவே என்னைப் போன்ற அல்லது திக தலைவர் கி.வீரமணி போன்ற கடவுள் மறுப்பு பெரியார்வாதியிடம் சொன்னால், நான் கடவுள் இல்லை என நம்புகின்றவன் இருந்தாலும் உனக்கு கோயிலுக்குள் செல்ல உரிமை இருக்கிறது. எனவே அதை தடுப்பது தவறு என்று குரல் கொடுப்போம்.
ஆனால், அதுவே கடவுளை நம்பும் அதேசமயம் பெரியர்வாதியாகவும் இருக்கும் சேகர்பாபு போன்றவர்களிடம் சொன்னால், கோயிலுக்குள் செல்லக் கூடாது என உன்னை யார் தடுத்தது, வா நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூட்டிச் செல்வார்கள். எனவே மதவாத சக்திகளுக்கு எங்களைவிட சேகர்பாபு போன்ற பெரியார்வாதிகளால்தான் பிரச்னை' என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.