நடிகர் சத்யராஜின் மகளும், மருத்துவருமான திவ்யா சத்யராஜ் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று, உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்தை விற்கும்படி திவ்யா சத்யராஜிடம் மிரட்டியதாக தகவல் வந்தது. இந்த சூழலில் ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்து திவ்யா சத்யராஜ் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர். அப்போது, தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். மல்டி வைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை அவர்கள் பரிந்துரைக்க கூறிய நிலையில், அந்த மருந்துகளில் ஓவர் டோஸாக வைட்டமின் இருந்ததால் அவற்றை பரிந்துரைக்க முடியாது என திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து முதலில் அவருக்கு லஞ்சம் வழங்க முன்வந்த அந்த மர்மநபர்கள் அதன்பின், திவ்யாவை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அஞ்சாமல் திவ்யா சத்யராஜ் அவர்கள் கிளினிக்கிலிருந்து வெளியேற்றியுள்ளார். மேலும் இந்த மருந்துகளை இந்தியாவில் நுழைய அனுமதிக்க கூடாது என்றும் அவர் பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.