“10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கிறது அப்பாவின் சிலை...”- கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு வேண்டுகோள்

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க வலியுறுத்தி, அமைச்சர் கே.என்.நேருவிடம் இரண்டு கைகளையும் கூப்பி நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Actor Prabu press meet
Actor Prabu press meetpt desk
Published on

'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை திருச்சியில் திரைப்பட நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இக்கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார்.

இதனை நடிகர் பிரபு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், அப்துல் சமத், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று பார்வையிட்டனர்.

Minister Anbil Mahesh
Minister Anbil Maheshpt desk

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எனக்கு சிறு வயதிலிருந்து பழக்கம் உண்டு. அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். இன்று அவர் முதல்வர் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம். தி.மு.க-வின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார். இதற்கெல்லாம் அவரது உழைப்பு தான் காரணம்.

அவர் மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்து வருகிறார் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கலைஞர், சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்டோர் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அப்போது ஷெரிஃப் என்ற ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றிவந்துள்ளோம். எங்களுக்கு சொந்தக்காரர்களும், நண்பர்களும் திருச்சியில் அதிகமாக இருக்கிறார்கள்.

Minister KN Nehru
Minister KN Nehrupt desk

திருச்சி பாலக்கரையில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின் சிலையை தி.மு.க அரசு திறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதை வேண்டுகோளாகவும் முன்வைக்கிறேன். தி.மு.க-வில் இருப்பவர்களுக்கு கலைஞர் மீது எவ்வளவு பிரியமோ, அதே அளவு சிவாஜி கணேசன் மீதும் பிரியம் வைத்துள்ளார்கள். ஆகவே விரைவில் நடிகர் திலகம் சிவாஜியின் சிலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தொடர்ந்து, தனது தந்தையின் சிலையை திறக்க வலியுறுத்தி இரண்டு கைக்கூப்பி அமைச்சர் கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் நடிகர் பிரபு வைத்த வேண்டுகோளை, ஏற்றுக் கொண்டதாக எந்த உறுதியும் அளிக்காமல், அமைச்சர் கே.என்.நேரு, அங்கிருந்து கடந்து சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com