நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், தீர்ப்பின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் காணொளி மூலமாக இன்று ஆஜர் ஆனார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். 2000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை நீதிபதி எஸ்.கே யாதவ் வாசித்தார். அப்போது பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார். அதன்படி வழக்கு தொடர்புடைய அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.