கொல்லிமலையில் வேதாந்தா குழுமம் பாக்சைட் வெட்டி எடுத்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கொல்லிமலையில் 12 ஆண்டுகளாக வேதாந்தா குழுமம் அனுமதியின்றி பாக்சைட் வெட்டி எடுப்பதாக வழக்குகள் தொடரப்பட்டன. அதில், பாக்சைட் வெட்டி எடுக்க 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும்,12ஆண்டுகளாக அனுமதியின்றி பாக்சைட் தாதுகளை வெட்டி எடுத்ததற்காக வேதாந்தா குழுமம் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ்மானுஷ் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூன் 1ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் பியூஷ் தெரிவித்துள்ளார்.