மதுரை ராஜாஜி பூங்காவில் 'நாய் காதல் செய்தால் நடவடிக்கை' என வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது.
மதுரை காந்தி மியூசியம் அருகே மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் , பெண்கள் என ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்வர். இந்நிலையில், பூங்கா பராமரிப்பிற்காக நிர்வாகம் சார்பில் பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி பூங்கா வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் 'நாய் காதல் செய்தால் நடவடிக்கை' எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விமர்சனங்களும் எழுந்தன.
காதலர்கள் சிலர் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வருவதைக் கூட கண்டுகொள்ளாமல் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கேக் வெட்டுவது, ஓடிப் பிடித்து விளையாடுவது என அத்துமீறலில் ஈடுபடுவதால் இது போல அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் பதிலளித்தது. இதையடுத்து காதல் செய்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை கண்டு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நாய் காதல் செய்யாதீர்கள் என்ற சர்ச்சைக்குரிய பேனரை அகற்றிய பூங்கா நிர்வாகம் புதிய அறிவிப்பு பேனரை வைத்துள்ளது. அதில், மதுரை மாநகராட்சி ராஜாஜி பூங்காவிற்கு வரும் நபர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவுகள் மற்றும் சங்கடங்கள் எதும் ஏற்படாதவாறு மிகவும் கண்ணியத்துடன் பொழுது போக்கும் இடமாக இப்பூங்காவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளவதாக பேனர் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் பூங்காவிற்கு வரும் நபர்கள் தங்களது கருத்துக்கள், புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனை இங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் எழுதி போடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.