முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு
Published on

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின்போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகார் தாரரான கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com