புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி துடையூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் டயர் வெடித்ததில் அந்த கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தை அடுத்து இருபுறமும் அடுத்தடுத்து வந்த 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிதம்பரம், முத்துக்காடை சேர்ந்த ரெங்கராஜன், நாகரத்தினம் என்ற பெண்மணி உள்பட உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை, போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை எஸ்பி.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.