தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் சதமடித்தது.
சென்னையில் சில நாள்களாக அனல் காற்று வீசிய நிலையில், இன்று வெப்பத்தின் அளவு அதிகரித்தது. மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. திருச்சி, நாகையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும், கடலூர், புதுச்சேரியில் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் வெப்பம் பதிவானது. தூத்துக்குடியில் 102 டிகிரி பாரன்ஹீட்டாக சுட்டெரித்த வெயில், கரூர், சேலம், பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாள்களுக்கு இயல்பைவிட அதிக அளவில் வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.