“கவிதைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது.
நான் கவிஞனாக இல்லாமல்
வேறு யாராகவும் இருக்க முடியாது”
- இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிக்கோ அப்துல் ரகுமான்
தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவருக்கு இன்று பிறந்த நாள். ‘மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ, ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார். கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் மனம்கவரப்பட்ட அப்துல் ரகுமான், மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளையும் விரும்பிப் படித்தார்.
எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர்வரை சென்று ஆழக் கற்பதைத் தன்னுடைய இயல்பாகக் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்; சமஸ்கிருதமும் கற்றறிந்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’பால்வீதி’ கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு புதுமை செய்தார். மேலும், ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். 'மின்மினிகளால் ஒரு கடிதம்' என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
’நேயர் விருப்பம்’, ’ஆலாபனை’, ’இறந்ததால் பிறந்தவன்’, ’கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை’, ’பித்தன்’, ’தேவகானம்’, ’பறவையின் பாதை’, ’பாலைநிலா’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், 'பூப்படைந்த சப்தம்', 'தொலைபேசி கண்ணீர்', 'காற்று என் மனைவி', 'உறங்கும் அழகி', 'நெருப்பை அணைக்கும் நெருப்பு' உள்ளிட்ட பல கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய ‘ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: அன்று கபில்தேவ் இன்று மேக்ஸ்வெல்... தனியொருவனாய் ஜெயித்துக்காட்டிய சூப்பர் ஹீரோஸ்!
கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை. இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், "கவிதையே கரை காணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம். எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக்கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்” எனப் பதிலளித்தார்.
காலம் அவரைக் கொண்டுசெல்லும்வரை, கவிதை மற்றும் கட்டுரையில் கொடிக்கட்டிப் பறந்தார். அவருடைய கவிதைகள் இன்றும் புதுக் கவிதையில் தடம் பதிப்போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துபவையாக விளங்குகின்றன. மனிதம் மறந்து மதம் கோலோச்சுவதை அன்றே தன் கவிதை ஒன்றில் அழகாய்ச் சுட்டிக்காட்டியிருப்பார்.
அதில்,
”மரப்பாச்சிருக்குக்
கை ஒடிந்தால்கூடக்
கண்ணீர் வடித்தோம்..
இப்போதோ நரபலியே
எங்கள்
மத விளையாட்டாகிவிட்டது”
- எனக் குமுறியிருப்பார்.
மேலும் மதம் குறித்து,
“நமக்கிருப்பதுபோல்
மிருகங்களிடம் மதம் இல்லை
ஆனால்
மிருகங்களின்
கள்ளம் கபடமில்லாத குணம்
நம்மிடமில்லை”
- என உணர்த்தியிருப்பார்.
மதம் மட்டுமல்ல, அப்படிப்பட்ட மதத்தைக் கொண்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளையும் இன்னொரு கவிதையில் சாடியிருப்பார்.
“தலைவர்கள்
பொறுப்புமிக்கவர்கள்..
செத்தாலும்
வாரிசுகளை விட்டுச்செல்கிறார்கள்
வழிநடத்துவதற்காக”
- என உணர்த்தியிருக்கும் கவிக்கோ, அதில் வாரிசு அரசியலையும் சுட்டிக்காட்டியிருப்பார்.
அதுபோல் தமிழகத்தின் இன்றைய நிலை குறித்த ஒரு கவிதையில்,
”கங்கை கொண்டவன்தான்
இன்று காவிரியையும்
இழந்துவிட்டு
கையைப் பிசைந்து நிற்கிறான்” - என்பார்.
இதையும் படிக்க: காஸாவின் முக்கியப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
’பால்வீதி’ என்னும் நூலில், ’தாகம்’ என்கிற தலைப்பில் அவர், சமுதாயக் கருத்துக்களை இழையோடவிட்டிருப்பார்.
”வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?”
- எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
அவருடைய இதே நூலின் இன்னொரு கவிதையில் (உடலுக்கு ஒரு வேகம்),
”சுதந்திரம் எனது
பிறப்புரிமை என்றது
சிறைக்கூடம்...
உள்ளே இருந்த
ஆயுட்கைதி
சிரித்துக்கொண்டான்”
- என நாட்டு நடப்பை நயப்புடைத்திருப்பார்.
”கண்ணில் ஏன்
மை தீட்டவில்லை?
என்கிறாயா தோழி
சொல்கிறேன்” - என ஆரம்பிக்கும் ஒரு கவிதையில்,
”அவரையே தீட்டி
அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம்
வேண்டுமா” எனவும்,
“கண்ணைவிட மென்மையானவர்
காதலர்;
கோல் பட்டால் வலிக்காதா” எனவும்,
”அவரைவைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா”
- எனவும் அடுக்கடுக்கான காரணங்களை எடுத்தியம்புவார்.
இதையும் படிக்க: அம்மா உணவகம் போல் ராஜஸ்தானில் இந்திரா உணவகம்... எப்படி இருக்கும் ..?
குழந்தைகள் குறித்தும் ஒரு கவிதையில் தன்னுடைய கவலையைத் தெரிவித்திருப்பார்.
”புத்தகங்களே…
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்” என்துடன்,
“வருடம் தவறாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடுபவர்களே!
இனிமேல்
தினங்களை விட்டுவிட்டுக்
குழந்தைகளை
எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்”
- எனக் கேள்வி எழுப்பி இருப்பார்.
ஒப்பில்லாத சமுதாயம் குறித்த கவிதை ஒன்றில், “எட்ட முடியாத இலட்சியங்கள் தேவை இல்லை; எட்ட முடிகின்ற யதார்த்தக் குடில் போதும்” என்பார். அதுபோல் உடலில் வந்திருக்கும் நோய் குறித்து ஓர் கவிதையில்,
”இருமல்..
இது இருமல் அல்ல...
மரணம்
உயிர் வீட்டுக்கதவை
இடிக்கும் ஓசை”
- என உணர்த்தியிருப்பார்.
அதுபோல் வளையும் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி கவிதை புனைந்திருப்பார்.
”வாழ்க்கை வாக்கியத்தின்
உணர்ச்சிக்குறியாயிருந்த
உடல்
வளைகிறது
கேள்விக்குறியாக” - என வாழ்க்கையை குறி வடிவங்களில் உணர்த்தியிருப்பார்.
அதுபோல் ஒரு மனிதனின் பதவி வெறி குறித்து,
”எத்தனை பதவி வெறி
இந்த மனிதருக்கு?
செத்தால் அதையும்
சிவலோக பதவியென்பார்” - எனச் சாடியிருப்பார்.
’கொடுக்கிறேன்’ என்கிற ஒரு கவிதையில்,
”கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே”
- என உண்மையின் ரகசியங்களை உலகுக்கு உணர்த்தியிருப்பார்.
இதையும் படிக்க: கொடைக்கானல் போனால் இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க...
இயற்கைச் சீற்றம் குறித்து கண்ணீர் வடித்த கவிக்கோ, வெறித்தனமாக வீசிய
”புயலோடு
வீராவேசமாகப் போராடி
நின்றுகொண்டிருக்கும்
மரங்களுக்கு
பரம்வீர் சக்ரா விருது
வழங்க வேண்டும்” - என்பார்.
இப்படி, தன்னுடைய கவிதைகளாலும், கட்டுரைகளாலும் அனைவரையும் ஈர்த்தார்.
காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதிகூட, தன் தலைமையில் நடக்கும் கவியரங்கம் எதிலும் அப்துல்ரகுமானை தவிர்க்க மாட்டார். அவரே ஒரு மேடையில் ‘அப்துல்ரகுமான் என் சபையின் ஆஸ்தானக் கவிஞர்’ என்று குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, ‘வெற்றி பல கண்டு நான்
”விருதுபெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும்
எனக் கேட்டால்
அப்துல் ரகுமானைத் தருக என்பேன்”
- என்று கலைஞராலேயே கொண்டாடப்பெற்ற கவிச் சிகரம் அவர்.
கவிதைகளாலும் கட்டுரைகளாலும் எத்தனையோ இதயங்களைக் கவர்ந்த அவர், தன்னுடைய மேடைப்பேச்சுகளாலும் இன்னும் பலரை வசீகரித்தவர், கவிக்கோ. துன்பம் குறித்து அவர் ஒருமுறை, “எதுவும் தேடினால்தான் கிடைக்கும் என்பது இறைவிதி. சிலரை எப்போதும் துன்பம் தொடர்கிறது. இந்த துன்பம் தொடர்ந்துவர காரணம், சரியான கதவு எது என்பதை அறியாமல் இருப்பதுதான்” என அழகாய் உணர்த்தியிருப்பார்.
இதையும் படிக்க: 292 அடித்த ஆப்கானிஸ்தான்... நெருக்கடியில் ஒரே ஆளாக வெற்றியை தேடித்தந்த மேக்ஸ்வெல்
’பொதுவாக, கவிதைகள் என்பது சமகால பிரச்னைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்; சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை’ என வலியுறுத்தும் கவிக்கோ, ”கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்துவிட்டது. சிலர் அறியாமையின் காரணமாக, ‘வசனத்தை ஒடித்துப்போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள்.
அது தவறு. ’ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என வலியுறுத்தியதுடன், “கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம்” எனக் குரல் கொடுத்தவர் கவிக்கோ மட்டும்தான்.
உண்மையில், கவிக்கோவிற்கு மரணம் வராமல் இருந்திருந்தால், இன்று மடைதெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் அவர் எழுதும் மணியான கவிதைகள் வழிகாட்டியிருக்கும் என்பது நிதர்சனம். அவருடைய மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, “ஒரு கவிதை ஆலமரம் சாய்ந்துவிட்டது; மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் கட்டப்பட்ட ஒரு தங்கப்பாலம் தகர்ந்துவிட்டது” எனக் கூறியிருந்தார். உண்மைதான். தமிழைத் தாங்கிப் பிடித்த அந்த தங்கப்பாலம் தகர்ந்துவிட்டது.