கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே அரசு பேருந்தில் காகம் ஒன்று சளைக்காமல் பயணிகளுடன் பயணத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுபடுத்த அரசு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்துள்ளது அரசு பேருந்துகளில் குறைவான பயணிகளை கொண்டு இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிவையில் பொதுமக்களும் தேவையில்லாத பயணங்களை தவிர்த்து வருவதால் கிராம புற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகள் குறைவான பயணிகளுடனே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அழகியமண்டபம் பகுதியில் இருந்து திருவட்டார் பகுதிக்கு இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்றது. அதில் திருவட்டார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மற்றும் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரும் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து கிளம்பி ஜங்சன் நிறுத்தத்தில் நின்றபோது பேருந்தின் உள்ளே புகுந்த காகம் ஒன்று உள்ளே இருக்கும் பயணிகள் குறித்து துளியளவும் பயமில்லாமல் பேருந்து இருக்கை கம்பியின் மீது அமர்ந்துள்ளது. மீண்டும் பேருந்து புறப்பட்ட போதும் அதை பொருட்படுத்தாத காகம் இருக்கையின் கம்பியில் இருந்து ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து பேருந்தின் வேகத்திற்கும் காற்றின் வேகத்திற்கும் ஈடுகொடுத்து சாலையை வேடிக்கை பார்த்தபடியே பயணத்தை மேற்கொண்டது.
பல நிறுத்தங்களில் பேருந்து நின்று சென்ற போதும் அந்த காகம் பேருந்தில் இருந்து பறந்து செல்லாமல் சுமார் 20-நிமிடத்திற்கு மேலாக தனது பயணத்தை தொடர்ந்தது. இந்த காட்சியை பேருந்தில் இருந்த தனியார் பள்ளி ஆசிரியை வியந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது பேருந்தில் சளைக்காமல் சாகச பயணம் மேற்கொண்ட காகத்தில் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.