ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் முக்கிய திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, 43 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் 40 ரூபாய்க்கும், 21 ரூபாய் 50 காசுகளாக இருந்த அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மற்றொரு வகையான நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 23 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை 22 ரூபாயாக குறைந்துள்ளது. அரை லிட்டர் நிறை கொழுப்பு பால் 24 ரூபாய்க்கும், இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 18 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பொதுமக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.