தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.