ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 30ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கடந்தாண்டு வழக்கு பதிவுசெய்து விசாரணை தொடங்கினர். குறிப்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2,438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அதில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக 4000 பக்க குற்றப் பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்தனர். இதில், நடிகர் ஆர்கே.சுரேஷ் 12கோடி ரூபாய் பணம் பெற்றது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் துபாயில் தலைமறைவாக இருக்கும் ஆர்கே.சுரேஷ், ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சுரேஷின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முயன்றால் நடிகர் ஆர்கே.சுரேஷுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு சட்ட வாய்ப்புகள் அடிப்படையில் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு வழக்கில் ஆஜராகாத நபர்களிடம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.