தமிழ்நாடு
ஈரோடு: காரை விற்று HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிய யூடியூபர்!
ஈரோட்டில் யூடியூபர் ஒருவர் தனது காரை விற்று ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 350 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் உணர்வுகள் அமைப்பின் மூலம் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யூடியூபர் ஆரிஃப் ரகுமான் என்பவர் தனது காரை விற்று அதில் கிடைத்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தில், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 350 பேருக்கு புத்தாடைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிஃப் ரகுமான், “உணவு தொடர்பான வீடியோக்களை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் சிறிய அளவிலான உதவிகளை செய்து வருகிறேன். சின்னத்திரை நடிகர் KPY பாலா ஆம்புலன்ஸ் வழங்கியது போல், அடுத்த முறை நானும் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்க இருக்கிறேன்” என தெரிவித்தார்.