தமிழ்நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் முழு பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கூடிய ஏராளமான பொது மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், கங்கை முதலான புண்ணிய நதிகள் புனிதநீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராணம் கூறுவதால் இங்கு நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரியில் நீரோட்டம் உள்ளது.
இந்நிலையில் இன்று முழு பொதுமுடக்கம் என்பதையும் மீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.