ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
16 வகை தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே பொதுமக்கள் கடலில் புனித நீராடி தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து வருகின்றனர். இதற்காக உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரி வருகை தந்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். இதற்காக, தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். இப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரி ஆற்றின் அம்மா மண்டப படித்துறையிலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர். காவிரி ஆற்றில் சிறு ஓடை போல் தண்ணீர் ஓடும் நிலையில், படித்துறை பகுதியில் மாநகராட்சி குழாய்களை அமைத்துள்ளது. எனவே, குழாய் நீரில் நீராடி விட்டு படித்துறையில் திதி கொடுத்துவிட்டு செல்கின்றனர். அதேபோல், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.