மதுரை மாவட்டத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் உரம் வாங்க வருபவர்கள் தங்களின் ஆதார் எண் விவரங்களை விற்பனை முனை எந்திரத்தில் பதிவு செய்து தங்களின் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணும், கைரேகையும் ஒத்திருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக வாங்கப்படும் உரம் அளவு விவரத்திற்கு செல்ல முடியும் என மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக ரசீது வழங்கப்படும் எனவும், இதனால் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான 147 தனியார் விற்பனையாளர்கள் மற்றும் 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை முனை எந்திரம் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.