சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே பட்டாக் கத்தியுடன் பிடிபட்ட இளைஞர் - போலீசார் விசாரணை

சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே பட்டாக் கத்தியுடன் பிடிபட்ட இளைஞர் - போலீசார் விசாரணை
சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே பட்டாக் கத்தியுடன் பிடிபட்ட இளைஞர் - போலீசார் விசாரணை
Published on

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் கத்தியுடன் பிடிபட்ட நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில், இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரே நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த இளைஞரைத் தூக்கச் சென்றபோது அவரது இடுப்பில் பட்டாக் கத்தி மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் பிடித்த போலீசார் அவரை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் தனது பெயர் கார்த்திக் எனவும், தான் ஒப்பந்தப் பணியாளராக எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், எழும்பூர் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பட்டாக் கத்தியை எடுத்து, அதை ஆர்.பி.எஃப் அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக வைத்துள்ளதாக முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரது பதற்றமும், பேச்சும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த இளைஞரின் பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளருக்கான அடையாள அட்டையும், 4 செல்ஃபோன்களும் இருப்பதை கண்ட போலீசார், அந்த இளைஞர் ஏதேனும் உள்நோக்கத்துடன் கத்தியுடன் சுற்றுகிறாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வேப்பேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேப்பேரி போலீசார், கார்த்திக் என்ற அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலேயே பட்டா கத்தியுடன் இளைஞர் ஒருவர், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com