திருப்பரங்குன்றத்தில் ஃபேஸ்புக் நண்பர்கள் அழைப்பை ஏற்று நேரில் சென்ற இளைஞர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தம்பதியினர் முன்னாள் ராணுவ வீரர் ராஜு, ஆசிரியை ஆதிலட்சுமி. இவர்களின் மகன் பார்த்திபன். இவருக்கு முகநூல் மூலம் சிலர் நண்பர்களாகியுள்ளனர். அவர்கள் பார்த்திபனிடம் நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளனர். பலமுறை அழைக்கப்பட்ட பின்னர், கடந்த சனிக்கிழமை இரவு ஃபேஸ்புக் நண்பர்களை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றார். சென்றவர் வீடு திரும்பவில்லை. ஏனென்றால் சந்திக்க வந்த ஃபேஸ்புக் நண்பர்கள், பார்த்திபனை கை, கால்களைக் கட்டி கடத்திச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து இரவு 12 மணியளவில் பார்த்திபனின் தொலைபேசியிலிருந்து அவரது தந்தைக்கு போன் வந்துள்ளது. போன் செய்த நபர்கள் பார்த்திபனை கடத்தி வைத்துள்ளதாகவும், விடுவிக்க வேண்டுமென்றால் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக பார்த்திபனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போன் வந்த நம்பரின் இடத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த நம்பர் பார்த்திபனின் வீட்டின் அருகாமையில் இருந்துள்ளது. இதனையடுத்து பார்த்திபன் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பார்த்திபனை கடத்தி கயத்தாறு பகுதியில் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
அங்கு ஒரு கும்பல் பார்த்திபனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரையே அந்த கும்பலிடம் பேச வைத்த காவல்துறையினர், பணத்தை பெற்றுவிட்டதாகவும் பார்த்திபனை விடுவிக்குமாறும் கூற வைத்தனர். அந்த நபர் கூறியதால் பார்த்திபனை அந்த கும்பல் விடுவித்துள்ளது. அங்கிருந்து, பார்த்திபன் பேருந்து மூலம் வீடு திரும்பினார்.
மேலும், கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். தப்பி வந்த பார்த்திபன், தன்னைப்போல யாரும் ஃபேஸ்புக் அல்லது ஆன்லைன் நண்பர்களை நம்பிச் சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.