செய்தியாளர்: கே.தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருப்பனம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரது மகள் அனிதா. இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து கருப்பூர் அருகேயுள்ள வெங்காயனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில், விக்னேஷ் வீட்டிற்கு அருகில் சந்திரன் என்ற மாணவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கல்லில் உள்ளது ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், அனிதாவும், சந்திரனும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அப்பா வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்ற அனிதா, நேற்று இரவு ஆகியும் வரவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தபோது, சந்திரனும் அனிதாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனிதாவை காணவில்லை என்று பெண்ணின் பெற்றோர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், தனது மகளை அழைத்துச் சென்ற சந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையறிந்த அனிதா, இன்று மதியம் காவல் நிலையத்திற்கு வந்தார். அவரை பார்த்த அவரது அண்ணன் சக்திவேல் மற்றும் உறவினர்கள், இப்படி மானத்தை வாங்கி விட்டாயே என்று கூறி, அனிதாவை கடுமையாக தாக்கினர். காவல் நிலையம் முன்பாகவே பெண்ணை தாக்கியதால், காவல் நிலையமே பரபரப்பானது. இதையடுத்து போலீசார், உடனடியாக விரைந்து சென்று, பெண்ணை தாக்கியவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அனிதாவையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அனிதாவை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற சந்திரன் என்ற மாணவர், அடிதடியை பார்த்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர் காவல் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.