விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை துரத்திச் சென்று அவரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளை சமூக விரோதிகள் சிலர் கேளி, கிண்டல் செய்வது தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வளவனூர் கிராம மக்களே நிதி திரட்டி சிசிடிவி கேமராக்களை அங்கு பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் வளவனூரில் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்திச் சென்று அவரை தாக்கி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பள்ளிக்குச் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வளவனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த சிசிடிவி காட்சியில் பள்ளி மாணவியை துரத்திச் செல்லும் இளைஞரை கண்டு, அந்த மாணவி பயந்து ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறார். பின் அந்த இடத்துக்குச் செல்லும் இளைஞர் பள்ளி மாணவியை தாக்குவதாக கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியே நேரில் வந்து புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறையினர் கூறிவிட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.