செய்தியாளர் சுரேஷ்குமார்
சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்த மதுமதி, உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென வந்த மாடு ஒன்று, வேகமாக வந்து மதுமதியை முட்டி தூக்கி உள்ளது. மாட்டின் கொம்பு மதுமதியின் காலைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்றது. அத்துடன் விடாமல் தரதரவன மதுமதியை இழுத்துக் கொண்டு மாடு ஓடியது.
கூச்சலிட்ட மதுமதியை விடாமல் மாடு இழுத்துச்சென்றது. இதைக் கண்ட சந்திரசேகர் என்பவர், மதுமதியை மீட்க ஓடியுள்ளார். மாடு சந்திரசேகரனையும் தூக்கி வீசி உள்ளது. கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மதுமதியை மாட்டிடமிருந்து மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பெண்ணைக் காப்பாற்றிய சந்திரசேகர், “மாடு அந்தப் பெண்ணை முட்டி 100 மீட்டருக்கு இழுத்து சென்றுவிட்டது. நான் அவரை காப்பாற்ற, அவரின் பின்னாடியே ஓடினேன். அந்த பெண்ணின் தலை மற்றும் உடல்கள் அங்கிருந்த கார்களில் அடித்துக் கொண்டே செல்கிறது. அதன்பின் மாட்டைப் பிடித்து கொம்பில் சிக்கி இருந்த துணியை எடுத்துவிட்டதன் பின், என்னையும் தூக்கி வீசிவிட்டது. அதன்பின் அந்த மாட்டைப் பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டிவிட்டு, 108க்கு அழைத்து அந்த அக்காவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டு, அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நானும் சிகிச்சை மேற்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காலில் 40 தையல் வரை போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரிமளா என்ற பெண் (சம்பவத்தை நேரில் பார்த்தவர்) இதுதொடர்பாக கூறுகையில், “கொஞ்ச நேரத்தில் அப்பெண் சுய நினைவை இழந்துவிட்டார். முதலில் நான் கால்களைப் பார்க்கவில்லை. தலையில் ரத்தம், கை மூட்டுகள் சிராய்த்து இருந்தது. அதன்பின், வேறு எங்கு காயங்கள் என்று பார்க்கும்போதுதான், தொடையில் கை உள்ளே போகும் அளவு குத்தி கிழித்திருந்தது” என தெரிவித்தார்.
மாடு முட்டிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். உரிய முறையில் பதிலளித்து எஃப் ஐ ஆர் பதிந்து கொள்கிறோம் எனக் கூறி முதற்கட்டமாக சிஎஸ்ஐஆர் அகல் எல்லாம் கொடுத்துவிட்டார்கள்” என தெரிவித்தார்.
பெண்ணைத் தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச்சென்றனர். ஆயினும் அந்த மாட்டின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே எச்சரித்துள்ளது. சென்னை சாலைகளில் சுற்றித்திருந்த சுமார் 3400 மாடுகள் இந்தாண்டு மட்டும் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 65 லட்சம் ரூபாய் வரை மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையே இந்தச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.