கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கமா?: உண்மையில் நடந்தது என்ன? வேலைக்கு உறுதியளித்த கனிமொழி!

கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. உண்மையில் இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஷர்மிளா, துரை கண்ணன்
ஷர்மிளா, துரை கண்ணன்புதிய தலைமுறை
Published on

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதால் பிரபலமானார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.

கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில், இன்று காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார்.

இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பணி நீக்கம் குறித்து ஷர்மிளா, ”பெண் நடத்துநர், ’எத்தனை பேரு வந்திருக்கீங்க? யாரா வேணுமானலும் இருங்க’ என அவங்க மனசு புண்படும்படி பேசுனாங்க. ‘அப்படியெல்லாம் பேசாதீங்க. அவங்க ஒரு இடத்துல இருக்காங்க மரியாதை கொடுக்கணும்’னு சொன்னேன். ஆனா, நான் சொன்னத அவங்க கேட்கவே இல்ல. கனிமொழி மேடத்தோட பிஏ 120 ரூபாய் கொடுத்தாங்க. பணத்தை வாங்கி டிக்கெட்டை கொடுத்துட்டு அந்த லேடி போயிட்டாங்க. அது, எனக்கு சங்கடமா இருந்ததால காந்திபுரத்துக்கு போனதும் ஆபீஸ்ல போய் சொல்லலாம்னு போனேன்.

அப்ப நான் சொன்னத ஓனர் காதுகொடுத்தே கேக்கல. கனிமொழி மேடத்தேட மனசு புண்படும்படி பேசிட்டாங்கன்னு சொன்னப்ப முதல்ல ஆமா தப்புதான்னு சொன்னவரு இரண்டாவது உள்னோட பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருத்தரையும் கூட்டிக்கிட்டு வர்ற. அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொன்னாரு. கனிமொழி மேடத்தேட மனசு புண்படும்படி பேசிட்டாங்கன்னு சொன்னப்ப முதல்ல ஆமா தப்புதான்னு சொன்னவரு இரண்டாவது உள்னோட பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருத்தரையும் கூட்டிக்கிட்டு வர்ற. அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொன்னாரு” என்றார்.

ஷர்மிளா அளித்த பேட்டியைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை, “இது, முடிந்துபோன விஷயம். அந்தப் பெண் நடத்துநருக்கும், என் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ்ஸை நிறுத்திவிட்டு, உரிமையாளரை நேரில் சென்று பார்த்தோம். அப்போது என் மகள், ‘பெண் நடத்துநர் ஒருமாதிரி பேசுகிறார். நான் என் பணியிலிருந்து ராஜினாமா செய்துகொள்கிறேன்’ என்றார்.

ஷர்மிளா தந்தை
ஷர்மிளா தந்தை

அதற்கு நான், ’மேடம் வருவதாக இரண்டு மேனேஜர்களுக்கும் தகவல் கொடுத்திருந்தேன். அதில், ஒருவர் தன்னிடம் சொல்லவே இல்லை என வாதிட்டார். என்னுடைய வயதிற்கு நான் பொய் செல்வேனா? நான் என்ன பைத்தியக்காரனா’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ’உடனே உங்க பெண்ணை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் மனவேதனையாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ஷர்மிளாவின் தந்தை பேசிய முழுக் கருத்தையும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் குறித்து அப்பேருந்தின் உரிமையாளர் துரை கண்ணன், “இன்று ஷர்மிளாவின் டூட்டி. அவர்கள்தான் இன்று பார்த்துக்கொண்டிருந்த நிலையில் பாதியில் இறங்கிச் சென்றுள்ளார்.

நான் வண்டிக்குச் சென்றிருந்தால், அவர்கள் பாதியில் இறங்கிப் போயிருக்கலாம். ஆனால், அவர்தான் வண்டியிலிருந்து பாதியிலேயே இறங்கி இங்கு வந்துள்ளார். அவருக்கு என்ன பிரச்னை என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.

பேருந்தின் உரிமையாளர் துரை கண்ணனின் விளக்கம் குறித்து முழுவதையும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதுகுறித்து அப்பேருந்தின் பெண் நடத்துநர் அளித்த பேட்டியில், ”மேடம் வணக்கம். நான் நடத்துநர் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ’டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட்டுக்கு காசு கொடுங்க’ எனக் கேட்டேன். அப்போது ஷர்மிளா, ’நீங்க டிக்கெட் எடுக்க வேண்டாம். டிக்கெட்டுக்கு நான் காசு கொடுக்கிறேன்’ எனச் சொன்னார். அப்போது அவருக்கு (ஷர்மிளா) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என நினைத்தேன். மேலும், கடமையை ஒழுங்காச் செய்ய வேண்டும் எனவும் நினைத்தேன். கனிமொழி மேடமும் சிரித்துக்கொண்டே, ‘சரிங்க... என் பி.ஏ. கொடுப்பாங்க’ என்றார். சொன்னபடியே அவர் பி.ஏ. 120 ரூபாய் காசு கொடுத்தார். நான் 6 டிக்கெட்டிற்கு காசு எடுத்துக்கொண்டு டிக்கெட்டையும், மீதிக் காசையும் அவர்களிடம் கொடுத்தேன். அவர்களும் அதைச் சிரித்தப்படியே வாங்கிக் கொண்டனர். இதுதான் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நான் டூட்டிக்கு வந்து 4 நாட்கள்தான் வருகிறது. அவருக்கும் எனக்கும் எந்தப் பகையுமில்லை. கனிமொழி மேடம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன், ஷர்மிளாவும் இறங்கினார். அப்போது பேருந்தை வேறு ஓட்டுநர் இயக்கினார். இறங்கிய இடத்திலேயே மீண்டும் பேருந்தில் ஏறிய ஷர்மிளா, ‘எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. நான் ராஜினாமா செய்யப்போகிறேன்’ என்றார். அப்போது நான், ‘என்னால் ஏதாவது பிரச்னையா? அப்படியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்றேன். அதுபோல் அவரிடம் ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டேன். ’என்னால் நீங்கள் இறங்க வேண்டாம்’ என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறு எதையும் நான் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன?

ஷர்மிளா இயக்கிய பேருந்தில் திமுக எம்.பி. கனிமொழி, முன் பக்கத்தில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார். அவருடன் அவரது பி.ஏவும், இதர பயணிகளும் பயணம் செய்கின்றனர். அப்போது அந்தப் பேருந்துக்குரிய பெண் நடத்துநர், கனிமொழி அருகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு டிக்கெட் எடுத்த விவரங்கள் குறித்து கேட்கிறார்.

அதற்கு கனிமொழி ’தன்னுடைய பி.ஏ. எடுப்பார்’ எனக் கைகாட்டுகிறார். அதற்குள் ஓட்டுநர் ஷர்மிளா, ‘மேடம் இருங்க, நான் கொடுத்துக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதற்குள் அவர்களே (கனிமொழி பி.ஏ.) டிக்கெட் எடுத்துவிடுகின்றனர். இதுதான் அந்த வீடியோவில் இருக்கும் நிலை.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக கனிமொழி எம்.பி உறுதியளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று கால்லை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார். இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் அறிந்த கனிமொழி எம்.பி., பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com