சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி வளாகத்துக்குள் மான் போர்ட்ஸ் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கேசவன் - குகன்யா தம்பதியினரின் மகன் மனிஷ் மித்ரன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் கடந்த 23-ஆம் தேதி வீட்டுப்பாடம் முறையாகச் செய்யாததாலும், சக மாணவர்களுடன் விளையாடியதாலும் அந்த பள்ளியில் பணிபுரியும் நாயகி என்ற ஆசிரியர், மாணவரை கன்னத்தில் அடித்துள்ளார். மேலும் காதை பிடித்துத் திருகியதில் காதில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். தற்போது மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இச்சம்பவம் குறித்து, மனிஷ் மித்ரனின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் நாயகி, மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை விதித்துள்ளனர்.
ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்குக் காது கிழிந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், " மனிஷ் மித்ரனுக்கு ஏற்கெனவே உடல் ரீதியாகத் தோல் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மனிஷ் மித்ரனின் ஆசிரியர் வராத காரணத்தினால், வேறொரு வகுப்பின் ஆசிரியை மாணவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
மனிஷ் மித்ரன் சக மாணவர்களுடன் அடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியை கண்டித்துள்ளார். அப்போது காதை பிடித்துத் திருகியதால், ஆசிரியரிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவன் பின்னோக்கி நகர்ந்தபோது பள்ளி அறையில் இருக்கக்கூடிய பெஞ்ச் மீது மனிஷ் மித்ரன் விழுந்ததால், காதின் பகுதி அறுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மனுஷ் மித்ரன் பெற்றோர், திருநங்கைகளுடன் வந்து பேசிக் கொண்டிருக்கும்போதே ஆசிரியையை அவர்கள் தாக்கினர். இதனால் ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என விளக்கம் அளித்துள்ளனர்.