சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப்பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக புகை இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
தீ விபத்து ஏற்பட்ட கீழ்தளத்திலிருந்து மேல்தளத்துக்கு அதிகளவில் புகை மூட்டம் செல்கிறது. தற்போதைக்கு தீ மற்ற வார்டுகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணமென்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. வளாகத்தின் உள்ளே இருந்த ஒரு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம், அல்லது மின்கசிவு ஏற்பட்டுதான் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்லீரல் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள் தற்போது கட்டடத்துக்குள் சிக்கியுள்ளனர். எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதுகுறிது இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயை அணைத்தால் தான் அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள முடியுமென்பதால், அதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
முதற்கட்ட பணிகள் குறித்து மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறை தகவல் தெரிவிக்கையில், “மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. உள்ளிருக்கும் பெரும்பாலானாவர்களை மீட்டு விட்டோம். மீதமிருப்பவர்களும் விரைந்து மீட்கப்படுவர்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளில் பங்குகொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: Form out - தொடரும் சோகமும்; விரக்தியான விராட் கோலியும்!