ஆளுநர் டு அண்ணாமலை: காவிநிற சர்ச்சையில் வள்ளுவர் படம்.. வெள்ளைநிற உடையில் ஓவியம் வந்தது எப்படி?

தொடர்ந்து பாஜகவினர் காவி நிற வடிவில் உள்ள திருவள்ளுவரை இணையதளத்தில் வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை, ஆர்.என்.ரவி
அண்ணாமலை, ஆர்.என்.ரவிட்விட்டர்
Published on

காவி நிற வள்ளுவரைப் பகிரும் பாஜகவினர்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருவள்ளுவர் புகைப்படமின்றி, வெறும் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்து இருந்தனர்.

அதேநேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் தங்களுடைய எக்ஸ் தளப் பக்கங்களில் வாழ்த்துப் பதிவுகளுடன், திருவள்ளுவரின் காவிநிறப் படத்தை இணைத்திருந்தனர். மேலும் காவிநிற திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் மலர்தூவி மரியாதை செய்த வீடியோவும், அவர் வெளியிட்டிருந்த பதிவில் ’பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவர்’ எனக் குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, பாஜக மற்றும் அதன் தலைவர்கள் சிலர் வள்ளுவரின் புகைப்படமான காவி வடிவில் இருந்ததையே பகிர்ந்துவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றி, காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பாஜக முயற்சி செய்துவருகிறது. அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் முதன்முதலாக காவி உடை அணிந்த திருவள்ளுர் படத்தை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனாலும் தொடர்ந்து பாஜகவினர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2019லேயே கண்டித்த மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து 2019இல், பாஜகவினரால் காவி நிற வள்ளுவர் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தன. அப்போது ’தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டன’ எனவும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தன. அந்த வருடத்திலேயே (2019) மு.க.ஸ்டாலின், “ 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சைகட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

துணைக் குடியரசுத் தலைவர் பகிர்ந்த காவி வள்ளுவர்

அதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு இதே திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அப்போது இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவும், இதேபோன்று காவி நிற உடையுடன் திருவள்ளுவர் போன்ற ஓவியத்தைப் பகிர்ந்தார். அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்தாலே கண்டிக்கத்தக்கது என்னும் நிலையில், அரசியலமைப்புப் பொறுப்பில் இருக்கும் துணைக்குடியரசுத் தலைவர் இப்படி செய்தது கடும் சர்ச்சையானது.

Summary

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, காவி திருவள்ளுவர் படம் நீக்கப்பட்டு, வேறு படம் மாற்றிவைக்கப்பட்டது. இதற்கு எம்.பி. செந்தில்குமார் நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து  காவிநிற வள்ளுவரைப் பகிரும் அண்ணாமலை

இந்த நிலையில், கடந்த ஆண்டும் (2023) அண்ணாமலை இதேபோன்ற காவி நிற வள்ளுவர் படத்தைப் பகிர்ந்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில், இந்த வருடமும் காவிநிற படத்தைப் பகிர்ந்திருப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ’வள்ளுவ மரபைக் கைக்கொள்ளவும், திருக்குறளை இந்து சனாதன மரபுக்குள் இணைத்துக்கொள்ளவும் நினைக்கும் எண்ணத்தின் செயல் வடிவம்தான் இது. வள்ளுவத்தை மீண்டும் மீண்டும் இந்துமயப்படுத்தும் நோக்கிலேயே பாஜக செயல்படுகிறது’ என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று பதிவிட்டுள்ள ட்விட்டில், ”133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு வெள்ளாடை வந்தது ஏன்?

திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என பல்வேறு கருத்துகள் சமீபகாலமாக நிலவி வரும்வேளையில், தற்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் சாயம் பூசவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. எனினும், 1950களில் முதன்முதலாக திருவள்ளுவர் எந்தமதச் சின்னமும் இன்றி வரையப்பட்டார் என்பதுதான் வரலாறு குறிப்பிடும் தகவல். 1950களின் பிற்பகுதியில்தான் வெள்ளாடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின.

ஓவியர் வேணுகோபால் சர்மா பலமுறை முயன்று உருவாக்கிய ஓவியமே, தற்போது நாம் காணும் வெள்ளைநிற வள்ளுவர் ஆகும். திருவள்ளுவர் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டதற்கான காரணத்தையும் அவரே தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கருத்துகளின் அடிப்படையில், ‘திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்' என்ற ஒரு சிறிய வெளியீட்டை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ளது. 'தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள்.

இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது' என அந்த வெளியீட்டில் கூறுகிறார் வேணுகோபால் சர்மா.

மேலும், திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படமே, அன்று வாழ்ந்த அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,1960இல் அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது. ஆனால், அரசியல் லாபத்திற்காக திருவள்ளுவர் மதச் சாயத்துக்குள் இழுக்கப்படுவதான் வேதனையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com