புத்தகக் காட்சி: மழைநீரில் நனைந்த புத்தகங்கள்.. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
47ஆவது புத்தகக் காட்சி சென்னை YMCA மைதானத்தில் ஒருநாள் மழை விடுமுறைக்குப் பின் மீண்டும் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் சதுர அடியில் 900 புத்தகக் கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக் காட்சி சென்னையில் கடந்த 7ஆம் தேதி பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தகக்காட்சியின் கடைசி வரிசையிலிருக்கும் ஜீரோ, காக்கைக் கூடு, யாவரும் ஆகிய பதிப்பகங்களில் ஏராளமான புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு CIBF என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நடத்திய புத்தகக்காட்சியைப் போன்று உலகத் தரத்தில் ஏற்பாடுகளைச் செய்தால் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம் என்கிறார் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்கள் ஒருவராகிய ராம்ஜி.
இதேபோல் காக்கைக்கூடு பதிப்பகத்திலும் 200 புத்தகங்கள் வரை வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பபாசியின் தலைவர் சேது சொக்கலிங்கத்திடம் பேசிய போது, ’10 லோடுகள் வரை மணல் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதுவரை 3 லோடுகள் மட்டுமே வந்துள்ளது’ என்ற அவர், ’பபாசியின் சார்பில் கட்டாயம் முடிந்த இழப்பீடு வழங்கப்படும்’ என்றார். இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.