கமுதி அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் விநோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 100 கிடாக்கள் பலியிட்டு வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இங்குள்ள கண்மாய் கரையில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா நடைபெறுவது வழக்கம். பொதுவாக திருவிழா என்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துகொண்டு கொண்டாடுவர். ஆனால் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பெண்கள் யாரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது இல்லை. ஏன் இப்படி ஒரு ஐதீகம்?
முன்பொரு காலத்தில் 5 சகோதரன்களோடு பிறந்த சகோதரி ஒருவர் தனது அண்ணன்களின் மனைவிகளால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் என்றும், இந்த இடத்தின் அருகே வந்தவுடன் மாயமானார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் முதல்நாடு கிராம மக்களின் கனவில் வந்த அந்த பெண் நான் மாயமான இடத்தில் தெய்வமாக இருந்து கிராமத்தை காப்பாற்றுவேன் எனவும் என்னை ஆண்கள் மட்டும் வருடம் ஒரு முறை கிடா வெட்டி வழிபடவேண்டும் என்றும் பெண்கள் யாரும் வரக்கூடாது என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே வருடம் ஒரு முறை ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலத்திற்கு இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான திருவிழாவில் நேற்று கிடா பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 100 கிடாய்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சமைக்கப்பட்ட உணவு, பனை ஓலையால் செய்த மட்டையில் பரிமாறப்பட்டது. எவ்வளவு சாப்பாடு மீதி இருந்தாலும், சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பது ஐதீகம். எனவே மீதமிருந்த உணவு அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது.
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.