சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் குட்டிக்கதை சொன்னார்.
அது -
"ஒரு ஊரில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒரு சிறுவன் மட்டும் தொடர்ந்து வெற்றி பெற்றான். ஒவ்வொரு முறையும் ஊர்மக்கள் கைதட்டினர். ஒரு முதியவர் மட்டும் கைதட்டவில்லை. சிறுவன் அவரிடம் ‘நீங்கள் ஏன் கைதட்டவில்லை?’ என்று கேட்டான். அப்போது அந்த முதியவர் ‘இதே கிராமத்தில் போதிய உணவில்லாத ஒரு சிறுவன் மற்றும் கண்பார்வை இல்லாத ஒரு சிறுவனோடு ஓட்டப்பந்தயத்தில் ஓடிவிட்டு வா’ என கூறினார்.
சிறுவனும் ஓடினான். வெற்றிபெற்றார். ஆனால் அப்போது வெற்றி பெற்ற அந்த சிறுவனுக்கு ஊர்மக்கள் யாருமே கைதட்டவில்லை. ‘ஊர்மக்கள் ஏன் கைதட்டவில்லை?’ என முதியவரிடம் கேட்டான் சிறுவன். அப்போது அந்த முதியவர் ‘அச்சிறுவர்களுடன் நீ மீண்டும் ஓடு. இந்த முறை அவர்கள் இருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு ஓடு’ என்றார். அதன்படி செய்த அச்சிறுவனை ஊர்மக்கள் மீண்டும் கைதட்டிப் பாராட்டினர்.
இதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. யார் யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு திமுக ஓடுகிறது இளைஞரணி” என்றார்.