சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகில் நிஷா என்றொரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருள் ஒன்றை வாடிக்கையாளர் வாங்கி போது அது காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்குக் கடை உரிமையாளர், “நான் என்ன செய்ய முடியும்? பிடித்தால் வாங்குங்க. இல்லன்னா விடுங்க. நீங்க என்னிடம் கேட்பது போல் நான் தயாரிப்பவரிடம் கேட்க முடியுமா?” என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் அங்குச் சென்று விசாரித்துள்ளார். பின்னர் காலாவதியான பொருட்களை படம் எடுத்த செய்தியாளரிடம் கடை உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். “நீ படம் எடுத்து என்ன செய்யப் போகிறாய்? ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறியபடி, “நீ நன்றாக இருக்க மாட்டாய்” என சாபம் விட்டார்.
அவர் விற்பனை செய்து வரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் காலாவதியானாவை எனத் தெரிந்தும் அதுகுறித்து பேசாத அவர், செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் மேலும் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், செய்தியாளரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேக்கரியில் சோதனை நடத்தியதில், குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரிடம் “மறுபடியும் இதுபோல் தவறு நடந்தால் வழக்கு தொடர்ந்து கடைக்குச் சீல் வைக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
மானாமதுரை சுற்று வட்டார பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாகக் கடைகளை ஆய்வு செய்வதில்லை என்றும் பெயரளவில் மட்டுமே ஆய்வு செய்து செல்கின்றனர் என்றும், இதனால் காலாவதியான பொருட்கள் அதிகளவில் கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.