விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அதில்,
‘உச்சநீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பில் கிரிமிலேயர் வரையறையை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
அரசு பணிகளில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் நிரப்பிட வேண்டும்
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கிட வேண்டும்’
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் மு. பாபு, துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, எழில் கரோலின், முதன்மைச் செயலாளர் ஏ சி பாவரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதில் பேசிய எம்.பி திருமாவளவன், “மாநில அரசு எந்தக் காலத்திலும் தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மேலும், உள்ஒதுக்கீடு தீர்ப்பில் கிரீமிலேயர் வரையறையை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திருமாவளவன் கூறியதாவது, “எந்தச் சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித் மாநில முதலமைச்சராக முடியாது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்தோடு இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என புரியும். நமக்கு திமுக அரசின் மீது நம்பிக்கை உள்ளது சரி.
ஆனால், திமுக அரசு என்பது நிலையானது இல்லை. மாநில அரசுதான் நிலையானது. ஆகவே, எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இங்கே இல்லை. அது வரவும் முடியாது“ என்று தெரிவித்துள்ளார்.