சென்னையில் இருந்து செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் விருத்தாசலம் அடுத்த பூவனூர் அருகே வந்த போது, ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணுடன் வந்த உறவினர்கள் அபாய சங்கிலி செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால், ரயில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் உறவினர்கள் கூச்சலிட்டவாறு கதறி அழுதனர். இதைடுத்து அருகில் உள்ள பெட்டிக்குச் சென்று அபாய சங்கிலியை இழுத்தனர். இதனால் ரயில் 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி நடுவழியில் நின்றது. இதைத் தொடர்ந்து ரயிலில் இருந்து இறங்கிய அவரது உறவினர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பெண்ணை தேடினார்கள். ஆனால், அந்த பெண் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது அந்த ரயிலில் வந்த உறவினர்கள் ரயில் நிலையத்தில் இறங்கி கதறி அழுதனர்.
இதைக்கண்டு அங்கிருந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “எங்களுடன் வந்த சங்கரன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி கஸ்தூரி என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டார். கஸ்தூரியின் வளைகாப்புக்காக சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு உறவினர்களுடன் சென்று கொண்டு இருந்தோம். தவறி விழுந்த கஸ்தூரியை கண்டுபிடித்து தாருங்கள்” என கண்ணீரோடு கூறியுள்ளனர்
இதைத் தொடர்ந்து போலீசார், விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற விருத்தாச்சலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அக்கர்ப்பிணி ஏன் வாசற்படி அருகே நின்றார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அதன்முடிவில், “எஸ்.9 பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணிற்கு வாந்தி வந்துள்ளது. வாந்தி எடுப்பதற்காக படிக்கட்டு ஓரம் சென்றபோது தவறி விழுந்துள்ளார்” என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கர்ப்பிணி பயணம் செய்த பெட்டியில் இருந்த உறவினர்கள் சிலர் செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தும், செயின் வேலை செய்யாததால் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க முயன்றனர்.
ரயில் பெட்டியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அடுத்த பெட்டிக்குச் சென்று செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்குள் அந்த விரைவு ரயில் பூவனூர் ரயில் நிலையம் அருகே சென்று விட்டது.
அங்கே இருந்து சிறிது தூரம் தேடி பார்த்தும் கஸ்தூரி கிடைக்காததால் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னரே அவர்கள் விருத்தாச்சலத்தில் இறங்கி போலீஸ் உதவியோடு தேடி கர்ப்பிணியை கண்டுபிடித்துள்ளனர்.
இதை குறிப்பிட்டு, “கஸ்தூரி பயணம் செய்த ரயில் பெட்டியில் எமெர்ஜென்சி செயின் வேலை செய்யாததால் அடுத்த பெட்டிக்கு சென்று செயினை இழுத்து நிறுத்துவதற்குள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தை ரயில் கடந்து விட்டது. செயினை பிடித்து இழுத்த போது ரயில் நின்றிருந்தால் அந்த பெண்ணை உயிருடன் மீட்டிருக்கலாம்” என கூறி உறவினர்கள் அழுதனர்.
இந்நிலையில், தற்போது கொல்லம் சென்று கொண்டிருக்கும் கொல்லம் ரயில், கொல்லம் சென்றடைந்த பின் அங்கிருக்கும் தொழில்நுட்ப ரயில்வே பணியாளர்கள் அந்த ரயிலில் உள்ள அவசர நிறுத்தும் கருவியை சோதனை செய்ய உள்ளார்கள். மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக வாந்தி எடுப்பதற்காக கதவு பகுதிக்கு கர்ப்பிணி ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக எமர்ஜென்சி ரயில் நிறுத்தும் கருவியை 7 கிலோ விசையில் நிறுத்தினால் மட்டுமே ரயில் நிற்கும் என சொல்லப்படுகிறது. அந்த எமர்ஜென்சி கருவி நேரடியாக பிரேக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் அதன் கனெக்ஷன் ரயில் ஓட்டுனரிடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.