கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பல்வேறு இடங்களில் மீள முடியாத அளவிற்கு ஆழந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட தேவைகளை கூட பெற இயலாமல் உயரமான இடங்களை நோக்கி தஞ்சம் அடைந்தது ஒருபுறமும், பல உயிரிழப்புகள் மறுபுறம் என்று ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி சென்னை புளியந்தோப்பு பகுதியில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பில் கர்ப்பிணி தாய் ஒருவர், பிரசவ நேரத்தில் ஆம்புலன்ஸை அழைத்தும், அங்கே தேங்கிய மழை நீரால் வாகனம் உள்ளே நுழைய முடியாததால் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் மினிட் ஆங்கில தளம் நேரடியாக களத்துக்கு சென்று சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், “புளியந்தோப்பு கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, சரியாக காலை 11 மணி அளவில் ஆம்புலன்ஸை அவரது குடும்பத்தினர் அழைத்தனர். ஆனால், 15 நிமிடங்கள் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் வீட்டிலேயே அவருக்கு பிரசவம் பார்க்க நேர்ந்தது. ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் நாங்கள் அனைவரும் இணைந்தே ஒரு போர்வையை கொண்டு அந்த கர்ப்பிணி பெண்ணை மீன்பாடி வாகனத்தில் ஏற்றினோம்.
பிறகு முதலுதவிக்காக அவரை அழைத்து கொண்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையை நோக்கி வந்தோம். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவர்களும் இல்லை.எனவே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சரியான நேரத்தில் கொண்டுவரப்படாததால் குழந்தையின் உயிரானது காப்பாற்றப்படவில்லை.இருப்பினும் தாய் சௌமியா தற்போது நலமாக இருக்கிறார். மேலும் அந்த மீன்பாடி வாகனத்தை எங்கள் பகுதியை சேர்ந்த காவல் அதிகாரிதான் (SI) ஓட்டினார்.உடன் இருந்த பெண் காவல் அதிகாரியும் கடைசி வரை இருந்து எல்லா உதவிகளையும் செய்தனர்.” என்று கூறினார்.
சரியான முதலுதவி கிடைக்காததால் அக்குழந்தை உயிரந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
- news courtesy - The News Minute