மழையில் தவித்த தெரு நாய்க் குட்டிகளுக்கு மீன் சாப்பாடு போட்ட காவல்துறை அதிகாரிக்கு ஃபேஸ்புக்கில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சிதம்பரம் பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் அம்பேத்கர். இவர் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார். அவ்வபோது நடக்கும் நிகழ்வுகள், சமூக செயல்பாடுகள் குறித்து தனது கருத்துகளை முன்வைத்து எழுதி வருகிறார். ஆகவே இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் பல சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களையும் முன் வைத்து வருவதால் மிக இயல்பாக இவரை பலரும் அணுகி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர் ஒரு நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளார். சாலையோரமாக கிடக்கும் ஒரு பெண் நாய், சில குட்டிகளை ஈன்றுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகமான மழை பெய்து வருவதால், அந்தக் குட்டிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக தெரிகிறது. இன்று சாலையோரமாக கிடந்த குட்டிகளை கவனித்த காவல்துறை அதிகாரி அம்பேத்கர் அவைகளை மீட்டு முறையான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். அதற்காக அவருக்குப் பலரும் பாராட்டுக்களை ஃபேஸ்புக்கில் தெரிவித்து வருகின்றனர்.
அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், “எங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்தேன். அப்போது அங்கே கிடந்த நாய் குட்டிகள் பார்க்க பாவமா இருந்தது. உடனே மீன் குழம்புடன் ஒரு பார்சல் சாப்பாடு வாங்கி ரெண்டையும் கலந்து சரி சாப்பிடட்டும்னு வச்சேன். வச்சத பார்த்தவுடன் ஓடி வந்து வாய வச்சதுதான் தாமதம்; லைட்டா கிர்ரடிக்க எல்லா குட்டிகளுக்கும் ஆரம்பிச்சிருச்சு. இன்னும் இத மாதிரி வாய்க்கு காரமா ருசியா சாப்பிட ஆரம்பிக்கல போல, எனக்கும் பாவமா இருந்துச்சு. உடனே தாய் நாய்க்கு போன் அடிச்சு சாரி, விசில் அடிச்சிதான் வரவழைச்சேன்! நல்ல விருந்து போல, தாய் சாப்பிடறத வேடிக்கைப் பார்த்துட்டு பால் குடிக்க ஆரம்பிச்சிருச்சுங்க.
அடுத்த நாள் ஸ்டேஷன் போனவுடன் கால்களில் வந்து தஞ்சமடைந்து விட்டது எல்லா குட்டன்ஸ்ங்களும், அப்புறம் என்ன, தயிர்சாதம் வாங்கிட்டு வந்து வச்சவுடன் மனுஷன பார்க்கக்கூட நேரமில்லாம செம்மய்யா சாப்பிட்டாங்க ..நம்ம போனா இப்பெல்லாம் வாலாட்டுறானுங்க....டெய்லி மீதமாகிற உணவுகளை இந்த குட்டன்ஸ்ங்களுக்கு போட்ருங்கன்னு சொல்லியிருக்கேன். அன்பு இருந்தால் யாரும் அனாதை இல்லைங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.