2 ஆண்டுகளாக "மனித மலத்தை" குடிநீரில் கலந்து வைத்த கொடூர நபர் ; சிசிடிவியால் அம்பலம்!
சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் குத்துச் சண்டைப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாகவே இவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டில் சமைத்த சத்தான உணவுகளைச் சாப்பிட போதும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் சென்று வந்துள்ளனர். வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குழப்பத்தில் இருந்த சங்கீதா, தன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில், பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்து ஒரு பக்கெட்டை எடுத்துச் சென்று வெளியில் வைத்து மலத்தையும், சிறுநீரையும் கலந்து அதை, சங்கீதா வீட்டின் குடிநீர்த் தொட்டியில் ஊற்றுவது தெரியவந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, இதுகுறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில், புகாரை வாங்க மறுத்த போலீசார் ஆதாரங்கள் இருந்ததால் புகாரைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எல்லப்பனை, அழைத்து விசாரணை மேற்கொள்ளாமல் எழுதி வாங்கிக் கொண்டு ஜாமீனில் அனுப்பி வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எல்லப்பனின் மைத்துனர் குமார் என்பவர், பெரிய ரவுடி என்றும் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என சங்கீதாவை மிரட்டி வருவதாகவும் தெரிகிறது. தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், எல்லப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கீதா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு எல்லப்பனின் தந்தைக்கும், மோகனின் தந்தைக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அப்போது, எல்லப்பனின் தந்தை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அதற்கு மோகன் குடும்பத்தினர்தான் காரணம் என நினைத்து, எல்லப்பன் பழிவாங்கும் நோக்கத்தில், கடந்த இரண்டு வருடமாகக் குடிநீரில் மலத்தைக் கலந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.