ராமநாதபுரத்தில் நண்பர்கள் 5 சேர்ந்து மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் தெற்கு கரையூர் பகுதியில் வசித்து வந்தவர் பூபதி. கட்டட வேலை செய்து வரும் இவரது வீட்டிற்கு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருப்புவனம் பகுதியில் இருந்து உறவினர் முனியான்டி மற்றும் அவரின் நண்பர் என 5 பேர் வந்துள்ளனர். அருகாமையில் கட்டட வேலை நடப்பதால், நண்பரான பூபதியின் வீட்டில் இரவு தங்க அவர்கள் முடிவுசெய்துள்ளனர். இரவு தூங்கும் முன் பூபதியை தவிர்த்து, மற்ற 5 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரில் ஒருவர் தகாத “ஒரு வார்த்தை”யால் திட்ட கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தனது உறவினர் வீடு என்பதால், முனியாண்டி நான்கு பேரையும் திட்டி, கோபப்பட்டுள்ளார். அப்போது முனியாண்டியை கத்தியால் குத்திவிட்டு, மற்ற நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து முனியாண்டி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முனியாண்டி அளித்த தகவலின் அடிப்படையில், கத்தியால் குத்திய 4 பேரையும் காவல்துறையினர் தேடியுள்ளனர்.
அவ்வாறு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, 4 பேரும் பேருந்து நிலையத்தில் சிக்கினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வந்தனர். இந்நிலையில் முனியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சிவமணி, அஜித்குமார், இருளகணேஷ் மற்றும் கரையூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த பொருட்களை ஆராய்ந்த போது 4 முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் திட்டம் போட்டு எங்கும் கொள்ளை அடிக்க வந்தவர்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.