செய்தியாளர் சார்லஸ்
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பார்கள்.. ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் ரத்தம் இன்று விலை போவது வேதனையான ஒரு விஷயம்..
அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை; அதை நிரூபிக்கப் பல வழிகள் இருக்கும்பட்சத்தில், உயிருக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த இது போன்ற ஆபத்தான விஷயங்களில் இறங்குவது ஆபத்திலும் ஆபத்துதான். அந்த வகையில் திருச்சியைத் திக்குமுக்காட ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது. அதிலும் பெண்கள் தான் அதிகம் சிக்குகிறார்கள் என்பது இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் கீழே ஓவியரான முகிலன் என்பவர் பெட் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவரிடம் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால் அதனை அப்படியே வரைந்து தரும் ஆற்றல் மிக்கவரான இவருக்கு, ஆபத்தை விளைவிக்கும் கொடூரமான எண்ணமும் தோன்றியுள்ளது. யாரேனும் ஒருவர், புகைப்படத்தை வரைந்து அதில் தனது ரத்தத்தைக் கொண்டு வர்ணம் செய்து கொடுக்கச் சொன்னால் அதை அப்படியே செய்து வருகிறார். இதற்காக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கத்தையும் உருவாக்கி, அதில் ரத்தம் எடுப்பது, வரைவது ஓவியத்தில் ரத்தத்தில் பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட அனைத்து காட்சிகளையும் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைப் பார்த்த பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்களை வரைந்து ரத்தத்தில் பெயின்ட் செய்து வரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இதற்காக ஸ்ரீரங்கம் தேவி தெரு பகுதியில் ஒரு ரத்த சேமிப்பு நிலையத்தில் ரத்தத்தைச் சேமிக்கக் கூடிய பணிகளை இவருடைய ஊழியர்கள் இருவர் செய்து வருகின்றனர். இரண்டு எம்எல் ரத்தத்தை எடுத்து அதன் மூலம் ஓவியத்தில் பெயிண்ட் செய்து கொடுக்கிறார். ஒரு ஓவியத்திற்கு 1500 ரூபாய் முதல் 5000 வரை கட்டணமாக வசூல் செய்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை ரத்தத்தில் ஓவியம் வரைவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்பொழுது திருச்சியில் ஒருவர் இதனைத் துவக்கி சமூக வலைத்தளத்தில் ரத்தத்தை எடுப்பது, வர்ணம் தீட்டுவது போன்ற காட்சிகளைப் பதிவேற்றம் செய்து அரசின் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார் என்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தகவல் கொடுத்த போது, "இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறேன். இதுபோன்று யாரும் ரத்தத்தில் ஓவியம் வரைவது, வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட செயலில் ஈடுபடக் கூடாது" என்றார். பொதுவாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரத்தம் எடுப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை அறியாமல் மக்கள் இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட்டுவது பெரும் குற்றம் ஆகும்.