தஞ்சையில் ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தன்று ரூ.1-க்கு முதியவர் ஒருவர் டீ விற்று சேவை செய்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையம் அருகே டீ கடை வைத்திருக்கும் முதியவர் தங்கவேலனார். தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கவிதைகள், பட்டிமன்ற பேச்சு ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர். தமிழின் மீது கொண்ட பற்றால், தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் மீதும் இவர் அலாதி பற்று வைத்துள்ளார். இதனால் தனது டீ கடையில் திருவள்ளுவர் தினத்தன்று மட்டும் ரூ.1க்கு டீ விற்பதற்கு முதியவர் முடிவு செய்துள்ளார். கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் எடுத்த அந்த முடிவை, இன்று வரையிலும் மாற்றிக்கொள்ளவில்லை.
அதன்படி, இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் தனது கடையில் ரூ.1க்கு டீ விற்கப்படுவதை முன்கூட்டியே அறிவிப்பு பேனர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டார். அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 வந்து மணி வரை இன்று அவர் கடையில் ரூ.1க்கு டீ-யை விற்பனை நடந்து வருகிறது. வழக்கமாக இவரது கடையில் நாள் ஒன்றிற்கு 20 லிட்டம் பால் டீ, காபி போடுவதற்காக பயன்படும் நிலையில், இன்று மட்டும் சுமார் 50 லிட்டர் பால் தேவைப்படும் என தங்கவேலனார் தெரிவிக்கின்றார்.
ஆரம்பத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு இலவசமாகவே டீ கொடுக்க நினைத்தாகவும், ஆனால் அதற்கு மக்கள் வரவேற்பு இல்லையென்பதால் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார் அந்த முதியவர். மேலும் திருவள்ளுவர் மேல் உள்ள பற்றால் தனது வாழ்நாள் முழுவதும் இந்தச் சேவையை செய்யப்போவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.