கலாக்க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மார்ச் 30 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மாணவி அளித்த புகார் அடிப்படையில் ஹரிபத்மன் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற மூன்று நபர்களை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து மட்டும் விசாரிக்க முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணை குழுவையும் கலாக்க்ஷேத்ரா சார்பில் அமைக்கப்பட்டது.
கடந்த வாரம் நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு முதல் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் மாணவர்கள் தங்களுக்கு கல்லூரி அல்லது கல்லூரி அருகே ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு புகார் அளிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்றும் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாணவர்கள் தங்கள் புகார்களை அளிக்க reachouttosupport.in/ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். இதில் கலாக்க்ஷேத்ராவை சார்ந்த மாணவர்கள் யாராக இருந்தாலும் முன்னாள் மாணவர்களாக இருந்தாலும் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிக்கும் நபர்கள் குறித்த எந்த விவரமும் ஆதாரங்களும் கல்லூரி நிர்வாகத்தை சார்ந்த யாருக்கும் தெரியாது என தெரிவித்து உள்ளனர்.
ஆன்லைன் மூலம் புகார் அளிக்க விரும்பாத நபர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் நீதிபதி கண்ணன் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.