அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்யும் புதிய திட்டம் இன்று திருவல்லிகேணியில் துவங்கப்பட்டுள்ளது. அதனை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் இருவரும் தொடக்கி வைத்தனர்.

234 தொகுதிகளிலும் 77 பொருள்கள் குறித்து 100 நாட்களில் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல் தொகுதியாக திருவல்லிக்கேணி தொகுதியில் திட்டம் ஆய்வு பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 77 பொருள்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, 100 நாட்களில் ஆய்வு பணியை முடித்து, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதற்கான புதிய திட்டம் திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று துவங்கப்பட்டது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ஒட்டுமொத்தமாக அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் மேற்பார்வையில் தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவை என்ன என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக புதிய திட்டம் இன்று, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் துவங்கப்பட்டது.

லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 234 தொகுதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு அரசு பள்ளி அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளியை திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் , அப்படி மேற்கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் 77 பொருட்கள் குறித்து சோதனை செய்யப்படும் என்று பேசிய அமைச்சர், ஒட்டுமொத்தமாக தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தேவை குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்களை கேட்டு அறிந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 100 நாட்களில் இந்த பணிகளை முடித்து, இது குறித்த முழுமையான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு மேலும் கூடுதலாக தேவை குறித்தும் இதில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் விழாவில் பங்கேற்று பேசிய திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஒரு தொகுதிக்கு ஒரு அரசு பள்ளியை பார்வையிட்டால் போதாது. ஒரு தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்வையிட்டனர். பின்னர் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினும் தனித்தனியே மரக்கன்றுகளை நட்டனர். பள்ளியில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com